22. அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் கோயில்
இறைவன் ஆபத்சகாயேஸ்வரர்
இறைவி பெரியநாயகி
தீர்த்தம் அக்னி
தல விருட்சம் எலுமிச்சை மரம்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருஅன்னியூர், தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'பொன்னூர்' என்று அழைக்கப்படுகிறது. மயிலாடுதுறையில் இருந்து கொருக்கை செல்லும் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
தலச்சிறப்பு

சிவபெருமானால் எரிக்கப்பட்ட மன்மதனை மீண்டும் பெற, அவனது மனைவி ரதி தேவி இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்து வழிபட்டு மீண்டும் மன்மதனை அடைந்ததாகத் தல புராணம் தெரிவிக்கிறது. அதனால் இத்தலத்து மூலவர் 'ஆபத்சகாயேஸ்வரர்' என்றும், தமது நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்ததால் 'அக்னீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

மூலவர் 'ஆபத்சகாயேஸ்வரர்' மற்றும் 'அக்னீஸ்வரர்' என்னும் திருநாமங்களுடன் அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'பெரிய நாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.

பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனை சமேத சுப்ரமண்யர், சனீஸ்வரர், சூரியன், பைரவர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர். இக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்தி 'மேதா தட்சிணாமூர்த்தி' என்று வணங்கப்படுகின்றார்.

பங்குனி மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் சூரியனின் கதிர்கள் மூலவர் மீது விழுந்து சூரிய பூஜை நடைபெறுகிறது. சூரியன், அக்னி, வருணன், பஞ்ச பாண்டவர் ஆகியோர் வழிபட்ட தலம்.

திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் இரண்டு பதிகங்களும் பாடியுள்ளனர்.

இக்கோயில் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com